இலங்கையிலுள்ள கலைஞர்களுக்கான ஓய்வூதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தலைவர் கீர்த்தி சுரஞ்சித் மாவனெல்லகே தெரிவித்துள்ளார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பூரண அனுசரனையில் சமூக பாதுகாப்புச் சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளக விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ நாவின்ன மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க ஆகியோரின் வழிகாட்டலில் இரு அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் குறித்த ஓய்வூதியத் திட்டத்திற்கு 444 இலட்சம் ரூபா நிதி சமூக பாதுகாப்புச் சபைக்கு கையளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிக்கு கொண்டாடப்படவுள்ள ஜனாதிபதியின் பதவியேற்பு இரண்டாம் ஆண்டு பூர்த்தி தினத்தில் இருந்து கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று சபையின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பயன்பெறவுள்ள கலைஞர்கள் கலாசார அலுவலக திணைக்களத்தினால் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு பாதியளவு அங்கவீனமுறல், முழுமையாக அங்கவீனமுறல் மற்றும் மரணம் போன்ற சந்தர்ப்பங்களில் பாரிய அளவு நட்டஈடுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.