தேசிய விபத்து தவிர்ப்பு வாரம் இன்று (15) ஆரம்பமாகின்றது.
வீதி விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு தேசிய தவிர்ப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 18ம் திகதி வரை இது தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் திடீர் விபத்துகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. வருடாந்தம் சுமார் பத்து லட்சம் பேர் இதனால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
வீதி விபத்து அனர்த்தங்களே கூடுதலாக இடம்பெறுகின்றன. வருடாந்தம் வீதி விபத்துகளால் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதுடன், வருடாந்தம் இரண்டாயிரத்து 500 மரணங்கள் சம்பவிக்கின்றன. வீதி சமிக்ஞையை பின்பற்றாமை, சாரதிகளும் - பாதசாரிகளும் கவனயீனமாக வீதியை பயன்படுத்துவது, கைபேசி பயன்பாடு, வாகனங்களின் தரம் ஆகியவை வீதி விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன.
விபத்துகளை தவிர்க்கும் தேசிய வாரத்தின் முதல் நாளான இன்று, பாடசாலை, முன்பள்ளி பாதுகாப்பு தினமாக பெயரிடப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை தொழில் ஸ்தாபனங்கள் பராமரிப்பு தினமாகவும், வியாழக்கிழமை வீடுகளை பராமரிக்கும் தினமாகவும் பெயரிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வீதிப் பாதுகாப்பு தினமாகும். அன்றைய தினம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல், விபத்துகள் நேரக்கூடிய இடங்களை பரீட்சித்தல், முதலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.