தேசிய வௌ்ளை பிரம்புத் தின தேசிய நிகழ்வு நாளை (14) பத்தரமுல்ல, அபேகம வளாகத்தில் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் (15) கொண்டாடப்படவுள்ள சர்வதேச வௌ்ளைப் பிரம்புத் தினத்தை முன்னிட்டு சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலில் சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் பார்வையற்றோர் புனர்வாழ்வு நிதியம் ஆகியன இணைந்து இத்தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்வு ஆரம்பமாகவதற்கு முன்னராக விழிப்புலனற்றோர் இணைந்து பாராளுமன்ற மைதானத்தில் இருந்து அபேகம வரையில் நடைபவனியொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் இலங்கை விழிப்புலனற்றோர் பொதுச்சேவை சமை, இலங்கை விழிப்புலனற்றோர் மக்கள் சம்மேளம், இலங்கை தேசிய விழிப்புலனற்ற பட்டதாரிகள் சங்கம் என்பன பங்களிப்பு வழங்கவுள்ளன.
இலங்கையில் 1970ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி முதலாவது வௌ்ளைப் பிரம்பு தினம் கோல் பேஸ் ஹோட்டலில் நடத்தப்பட்ட உலக விழிப்புலனற்றோர சங்க கூட்டத்தினையடுத்து ஒக்டோபர் 15ம் திகதி சர்வதேச வௌ்ளைப் பிரம்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.