உலக தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தகவல் அறியம் உரிமை தொடர்பான மாநாடு எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, ஜயிக் ஹில்ட்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் உலக தகவல் அறியும் உரிமை, ஊடக சட்ட திட்டங்கள், வெகுஜன ஊடகத்துறையின் தற்கால நிலைமை என்பன தொடர்பில் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தகவல் அதிகாரசபையை விரைவில் ஸ்தாபிக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய, தகவல் அறியும் சட்டம் என்பது எங்களுக்கு புதிய விடயம். மக்களுடன் குறிப்பாக கிராமிய மட்ட மக்களுடன் இது தொடர்பில் பணியாற்றுவது மிக அவசியம். இதனை எமது அயல் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதும் அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.
இம்மாநாட்டில் சர்வதேச ரீதியில் தகவல் அறிதல் தொடர்பான விசேடநிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.