மெக்ஸிகோவின் யுகடான் தீகற்பத்தில் உள்ள சிசேன் - இட்ஸா மற்றும் கோபா ஆகிய கிராமங்களில் ஆண்டுதோறும் செல்லும் சுற்றுலா பிரயாணிகள் மாயன்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரமீடுகளை
ரசிப்பதற்கு செல்வதானது மக்கள் மத்தியில் அச்சுற்றுலா பிரதேசத்திற்குள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ , குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சி பெற்ற ஒரே எழுத்து மொழியை இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே கொண்டிருந்தனர் என்கிறது வரலாற்று ஆய்வுகள்.
கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள்.
கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சித்திர எழுத்து என்ற வகை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல் படம் வரைந்து விளக்கும் முறை. கி.மு. 400 - இந்த காலகட்டத்திலோ அல்லது இதற்கு முன்பாகவோ நாட்காட்டிகள் கண்டுபிடிக்கபட்டிருக்கலாம். கி.மு. 300 - மன்னர்கள், பிரபுக்கள்,பூசாரிகள் என்று சீரான ஆட்சிமுறை. ஒவ்வொரு பதவிக்குமான பொறுப்புகள் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
கி.மு. 100 - டேயோட்டிவாக்கன் (Teotihuacan) என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம், பிரமிடுகள், கோயில்கள், அரண்மனைக
ள், பொதுச்சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது. கி.மு.50 - சேர்ரோஸ் (cerros) என்ற நகரம் உருவானது. கோவில்கள் மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.
மாயன் கணிதம்.
மாயன் எண் முறைமை 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவ
ல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள்.
குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
மாயன் கட்டிடக் கலை
அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக்கலையில் மிகச்சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது. நவீன வரலாறு , தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும்
கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. ஏனைய புராதன நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன்படுத்தாமலயே மிகப் பெரிய மதசடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர்.
மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.
மாயன் வானியல்
ஏனைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன் , சந்திரன், புதன் , சுக்கிரன்போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியொட்டியே சடங்குகளை நடத்தினர்.
ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன. மாயன் நம்பிக்கைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.
இலக்கியம்/நூல்கள் ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் படஎழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஸ்பெயின் ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிறிஸ்தவர்கள் பல
மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.
மாயன்களின் வீழ்ச்சி
மாயன்கள் கடவுள்களை மிக நம்பினார்கள். மொத்தம் 166 கடவுள்கள் இவர்களது வழிபாட்டில் இருந்திருக்கிறது. பிரமாண்டமான கோயில்கள் திருவிழாக்கள் என இருந்த இவர்கள் பலியிடுவதில் விலங்குகள் மட்டுமின்றி கைதிகள், அடிமைகள், குழந்தைகள் என பலியிட்டுள்ளனர். இயற்கையை பற்றி கவலை படாமல் காடுகளை அழித்து விவசாயம் செய்தனர். இதனால் மழை குறைந்து பசி பட்டினி வறட்சி என்ற நிலைமையில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினின் படையெடுப்பால் தொண்ணூறு சதவிகிதத்திற்கு மேல் கொல்லப்பட்டனர். சிலர் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடினர் என்று வரலாறு கூறுகிறது.
எஞ்சியிருக்கும் மாயன்கள் இன்றும் தமது புராண கடவுள்களையும் இறந்த முதாதையர்களையும் வணங்குகின்றனர். அதேவேளை, தேவாலயங்களில் உள்ள புனிதர்களையும் வணங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அவர்களுடைய புராதன கடவுளையும் சந்திரனையும் இயேசுவாகவும் தேவ மாதாவாகவும் வணங்குகின்றனர். சிலுவையை இயேசுவாக நினைத்து அவர்கள் வணங்குவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் ஆதிகாலம் தொட்டு கௌரவித்து வந்த செய்பா என்ற தாவரத்திற்கு அடையாளமாக பயன்படுத்துகின்றனர். எனவே சிலுவைக்கு தண்ணீர் ஊற்றுவதுடன் செய்பா மலர்களினாலும் அலங்கரிக்கின்றனர்.
நன்றி- ” (The Mayas—3000 Years of Civilization)/ இணையம்
ஆர்த்தி பாக்கியநாதன்