01.தேசிய உயிர்ப் பல்வகைமை உபாய வழி செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்தல் (விடய இல. 07)
1992ம் ஆண்டு நடைபெற்ற “பூகோள மாநாட்டின்” போது வெளியிடப்பட்ட சர்வதேச உயிர்ப் பல்வகைமை இணக்கப்பாட்டில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. இதனடிப்படையில் விலை மதிப்பற்ற பல சேவைகளைப் பெற்றுத் தரும் இலங்கையின் உயிர் பல்வகைமைப் பாதுகாப்பு, அதன் நிலையான பயன்பாடு மற்றும் உயிரியல் வளங்களின் பயன்பாடு, அதன் மூலம் கிடைக்கின்ற பலன்களையும் சமமாகப் பகிர்ந்தளித்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2016 – 2022 ஆம் ஆண்டு வரையான இலங்கையின் தேசிய உயிர்ப் பல்வகைமை உபாய வழி செயற்பாட்டுத் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த யோசனைகளை அமைச்சரவை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டது.
02. சுற்றுலா ஹோட்டல்களினை வரையறை செய்தல் (விடய இல. 08)
சுற்றுலா ஹோட்டல்களை 1 – 5 வரையான நட்சத்திர ஹோட்டல்களாக வகைப்படுத்தும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச கொள்திறன் மற்றும் வசதிகள், அதற்கு உரித்தான அனுமதிப்பத்திர கட்டணங்களை குறித்துரைத்தல், கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு விதிகள், ஹோட்டல்களின் பரப்பளவு போன்ற விடயங்களை உள்ளடக்கி 2005ம் ஆண்டின் 38ம் இலக்க சுற்றுலாத்துறை சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதிய 1963/28 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறித்த அமைச்சரினால் வெளியிடப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. தேசிய பூங்காக்களையும்ஈ புதிய வனசீவராசிகள் சரணாலயங்களையும் பிரகடனப்படுத்தல் மற்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சரணாலயங்களின் எல்லைகளை மீளமைத்தல் (விடய இல. 09)
இந்நாட்டில் நாள்தோறும் அதிகரித்துக் காணப்படும் மனித செயற்பாடுகள் காரணமாக உயிர் பல்வகைமைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் இந்நாட்டின் வனாந்தரங்கள் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றன. இந்நிலைமையினை கருத்திற் கொண்டு, சரணாலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கலாவெவ, கஹல்ல பல்லேகலை ஆகிய சரணாலயங்களை தேசிய பூங்கா தரத்துக்கு உயர்த்துவதற்கும், காயன்கர்னி பிரதேசத்தினை கடல்சார் இயற்கை காப்பிடமாக பிரகடனப்படுத்துவதற்கும், கொட்டுஅத்தாவல சரணாலயமாகவும், அக்குரல, கொடிகஹவத்த ஆகியவற்றை புதிய வனசீவராசிகள் சரணாலயங்களாகவும், குடா ராவனா மகா ராவனா பிரதேசத்தை கடல்சார் சரணாலயமாக பிரகடனப்படுத்துவதற்கும், மாதுகங்கை சரணாலயத்தின் எல்லைகளை மீளமைப்பதற்கும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையினை ஸ்தாபித்தல் (விடய இல. 12)
சமூகப் பொருளாதார அபிவிருத்திக்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் என்பவற்றில் அதிகபட்சமான முதலீடுகளை இடும் நோக்கில், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் தேசிய நெறிப்படுத்தலின்றி இரட்டிப்பு வேலையை ஏற்படுத்திய சுமார் 21 அமைச்சுத் துறைகளினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற ஆங்காங்கு சிதறியுள்ள 80 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வசதிகள் என்பவற்றை ஒருங்கிணைப்பதற்காக தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையினை பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் ஸ்தாபிப்பது தொடர்பில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. முன்மொழியப்பட்டுள்ள தேசிய முதியோர் சுகாதார கொள்கையும் உபாயமுறைகளும் (விடய இல. 14)
இலங்கையில் சனத்தொகை வேகமாக வயதடைந்து வருகிறது. முக்கணிப்பு உத்தேசங்களுக்கமைவாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் பங்கு தற்போது காணப்படும் 12 வீதத்திலிருந்து 2020 இல் 16 வீதத்திற்கும், 2050 இல் 29 வீதத்திற்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலைமைக்கு முகங்கொடுக்கும் நோக்கில் சுகாதார துறையினை உரிய முறையில் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட முன்மொழியப்பட்டுள்ள தேசிய முதியோர் சுகாதார கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. சுகாதார தகவல் தொடர்பான தேசியக் கொள்கை (விடய இல.15)
இலங்கை அரசு அதன் இலவச குணப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சுகாதார சேவைகள் மூலம் மக்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்க உறுதி பூண்டுள்ளது. சுகாதார சேவை வழங்கலானது தகவல்களின் அடிப்படையில் அமைந்தது. அதாவது, நோய் கண்டறிதல் தொடக்கம் அதனை குணப்படுத்தல் மற்றும் நிர்வாகம தொடர்பிலான முடிவுகளை எட்டுதல் என்பன யாவும் சுகாதார தகவல்களின் பாவனையிலேயே தங்கியுள்ளது. எனினும் குறித்த தகவல்களில் பல்வேறு வகையான குறைப்பாடுகள் காணப்படுவது யாவரும் அறிந்த விடயமே. இதனைக்கருத்திற் கொண்டு தேசிய சுகாதாரக் கொள்கையுடன் இணக்கமாக அதன் நோக்கங்களை எட்டும் விதத்தில் பரந்துபட்ட ஒருங்கிணைந்த, தருணத்திற்கேற்ற நெகிழ்ச்சியான, செலவுக் குறைந்த, நீடித்துக் நிலைக்கக் கூடிய சுகாதார தகவல் முறையொன்றை அமுல்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் குறித்த தகவல் முறைமையை இலத்திரனியல் தகவல் முறைமையாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ள “சுகாதார தகவல் தொடர்பான தேசிய கொள்கை” சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
07. இரத்மலானை வாழ்க்கைத் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 17)
இரத்மலானை வாழ்க்கைத் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 600 மாணவர்கள் தங்குவதற்கு உகந்த விடுதியொன்று, 300 இருக்கைகள் கொண்ட சிற்றுண்டிச்சாலையொன்று மற்றும் தெழிற்பட்டறை ஆகியவற்றை 927.34 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் மேற்கொள்வது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. சிலோன் ஜேர்மன் தொழில்நுட்பவியல் பயிற்சி நிறுவகத்தினை கூட்டிணைப்புச் செய்தல் (விடய இல. 18)
திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் சிலோன் ஜேர்மன் தொழில்நுட்பவியல் பயிற்சி நிறுவகத்தினை தனியாக இயங்கும் நிறுவனம் ஒன்றாக பாராளுமன்ற சட்டத்தின் மூலம் கூட்டிணைப்புச் செய்வதன் தேவையினை கருத்திற் கொண்டு, அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள “சிலோன் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தைக் கூட்டிணைத்தல்” பற்றிய வரைபு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் அதனை முன்வைப்பதற்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தை, பட்டம் வழங்கும் நிறுவகமாக தரமுயர்த்துதல் (விடய இல. 20)
டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தை பட்டம் ஒன்றினை வழங்கும் பல்கலைக்கழகம் ஒன்றின் அளவுக்கு தரமுயர்த்தும் வகையிலான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்தியாவின் பன்ஜாப் பிரதேசத்தில் அமைந்துள்ள லவ்லி தொழில்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து குறித்த பயிற்சிகளை வழங்குவதன் மூலம் குறித்த பிரிவில் பட்டம் ஒன்றை வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே குறித்த விடயம் தொடர்பில் இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகம் மற்றும் இந்தியாவின் பன்ஜாப் பிரதேசத்தில் அமைந்துள்ள லவ்லி தொழில்சார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ ரி~hட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. வட்டாரகமை ஸ்ரீ அரஹந்த மலியதேவ ரஜமஹா விகாரையை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 23)
2017ம் ஆண்டு நடாத்தப்படும் அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு கேகாலை மாவட்டத்தில் கலிகமுவை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வட்டாரகமை ஸ்ரீ அரஹந்த மலியதேவ ரஜமஹா விகாரை அபிவிருத்தி பணிகளினை நிறைவு செய்வதற்கு தேவையான 35 மில்லியன் மேலதிக நிதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்~ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11.உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் பற்றிய அமைச்சரவைத் துணைக்குழுவின் பரிந்துரைகள் (விடய இல. 24)
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்குகளை அளிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 2013ம் ஆண்டு 27ம் இலக்க வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினை செயற்படுத்தும் காலப்பகுதி 2015ம் ஆண்டு ஜுன் மாதம் 19ம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் பரிந்துரையின் படி குறித்த பதிவுகளை மேற்கொள்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என இனங்கண்டுள்ளமையினால், குறித்த சட்டம் அமுல்படுத்தப்படும் காலத்தை மேலும் 04 வருடங்களினால் அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் அதனை முன்வைப்பதற்கும் குறித்த துணைக்குழுவின் தலைவர் எனும் ரீதியில் நீதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்~ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. எல்பின்ஸ்டன் கலையரங்கின் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளல் (விடய இல. 33)
1925ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு, 1988ம் ஆண்டு அரசினால் சுவீகரிக்கப்பட்ட எல்பின்ஸ்டன் கலையரங்கினை நவீனமயப்படுத்தி, 2017ம் ஆண்டு முதல் காலாண்டிற்குள் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எஞ்சிய வேலைகளை முடிப்பதற்காக மேலதிக நிதியினை திரட்டிக் கொள்ளும் நோக்கில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இலங்கையினுள் மரக்கறி மற்றும் பழங்கள் சார்ந்த பெறுமதித் தொடரை மேம்படுத்துகின்ற நிலையங்களை (ஏயடரந யுனனவைழைn ஊநவெநசள) நிர்மாணித்தல் (விடய இல. 36)
சர்வதேச சந்தையினை இலக்காகக் கொண்டு வெளிநாட்டு தரத்திற்கு மற்றும் தேவைகளுக்கு உகந்த முறையில் மரக்கறி மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மரக்கறி மற்றும் பழங்கள் சார்ந்த பெறுமதித் தொடரை மேம்படுத்துகின்ற 03 நிலையங்களை, அரச – தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிப்பதற்கு ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் கௌரவ தயா கமகே அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. பாரிய கொழும்பு கழிவு நீர் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகியவற்றை முன்னேற்றும் முதலீட்டு வேலைத்திட்டம் - கருத்திட்ட இலக்கம் - 02 (விடய இல. 40)
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உரிமை அபிவிருத்தி முகவராண்மை ஆகியவற்றினால் நிதியுதவி அளிக்கப்படும் பாரிய கொழும்பு கழிவு நீர் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகியவற்றை முன்னேற்றும் முதலீட்டு வேலைத்திட்டம் - கருத்திட்ட இலக்கம் - 02 இன் கீழ் 15,000 கண மீற்றர் கொள்ளவைக் கொண்ட கொத்தடுவை நிலத்தடி நீர் சேமிப்பகம், கொத்தடுவை நீர் கோபுரம் மற்றும் பூஸ்டர் குழாய்ப்பொறி நிலையம் என்பவற்றை நிர்மாணித்தல் மற்றும் நீர் வழங்குவதற்காக 1200 மி.மீ. அகவல் கொண்ட குழாய்களை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்களின் பெயரில் ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. சியபலாண்டுவ நீர் வழங்கல் திட்டத்தினை நிர்மாணித்தல் (விடய இல. 41)
சுமார் 8,450 வீடுகளுக்கு ஆரோக்கியமான குடிநீரினை பெற்றுக் கொடுக்கும் சியபலாண்டுவ நீர் வழங்கல் திட்டத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்களின் பெயரில் ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத்திட்டம் - 2017 - 2019 (விடய இல. 44)
து~;பிரயோகங்களை தடுத்தல் மற்றும் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சுகாதாரம், போசாக்கு மற்றும் நலன்புரி, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத்திறன் ஆகிய பிராதன 03 துறைகளின் கீழ் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கும் வகையில் தயாரி;கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டமிடலுக்கு அமைவாக, 2017 – 2019 காலப்பகுதியினுள் “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. “பலம் மிக்கதோர் இலங்கை” அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம் (விடய இல. 45)
தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி திட்டம் மற்றும் அத்திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பில் இதுவரை பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள “பலம் மிக்கதோர் இலங்கை” எனும் வெளியீடானது கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.