01. குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கான வீட்டு உரிமை வேலைத்திட்டத்துக்காக திறைசேரியில் விசேட செயலணி ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 07)
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டு உரிமையினை பெற்றுக் கொடுக்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 120,000 வீடுகளும், நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 500,000 வீடுகளும் எனும் அடிப்படையில் மொத்தம் 620,000 வீடுகளை 2019ம் ஆண்டுக்குள் அமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வேலைத்திட்டத்துக்கு தேசிய முன்னுரிமை வழங்கி, அதற்கு தேவையான அங்கீகாரத்தைப் பெறல், குறித்த காணிகளை ஒதுக்கிக் கொள்ளல் மற்றும் வேலைத்திட்டத்தை குறிப்பிட்ட காலப்பிரிவிற்குள் செய்து முடித்தல் ஆகியவற்றுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளும் நோக்கில் திறைசேரியின் கீழ் விசேட செயலணி ஒன்றை (Special Purposes Vehicle – SPV) ஸ்தாபிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளினை பலப்படுத்துவதற்காக புதிய சட்டம் ஒன்றை தயாரித்தல் (விடய இல. 08)
2009ம் ஆண்டு 41ம் இலக்க சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து எதிர்பார்க்கும் பணிகளை, குறித்த திணைக்களத்தில் தற்போது காணப்படும் நிர்வாக அமைப்பின் ஊடாக செவ்வனே நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அதனடிப்படையில் தற்காலத்தின் தேவைக்கிணங்க கரையோர பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் குறித்த திணைக்களத்தை மிகவும் பலமான நிறுவனம் ஒன்றாக ஸ்தாபிக்கும் நோக்கில், 2009ம் ஆண்டு 41ம் இலக்க கரையோர பாதுகாப்பு திணைக்களத்தை சட்டத்தை ஆராய்ந்து புதிய சட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. கடானை நீர் வளங்கள் திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதி திரட்டிக் கொள்ளுதல் (விடய இல. 12)
கடானை பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் கணிசமான மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக கடானை நீர் வளங்கள் வேலைத்திட்டத்தை செயற்படுத்த அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு தேவையான நிதியினை திரட்டிக் கொள்வதற்கு சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு இடையில் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. தபுத்தேகம நீர் வளங்கள் திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதி திரட்டிக் கொள்ளுதல் (விடய இல. 13)
தலாவ, தபுத்தேகம மற்றும் கல்னேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் கணிசமான மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக தபுத்தேகம நீர் வளங்கள் வேலைத்திட்டத்தை செயற்படுத்த அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு தேவையான நிதியினை திரட்டிக் கொள்வதற்கு சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு இடையில் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
05. களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு தேவையான மேலதிக நிதியினை திரட்டிக் கொள்ளல் (விடய இல. 14)
களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாண பணிகளை 2018ம் ஆண்டு இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. முன்னர் இனங்காணப்படாத பூகோளவியல் நிலைமையினால் குறித்த வேலைத்திட்டமானது தற்போது மாற்றத்துக்கு உள்ளாகி உள்ளது. அதனடிப்படையில் அதன் மதிப்பீட்டுத் தொகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மேலதிக நிதியில் ஒரு தொகுதியை திரட்டிக் கொள்ளும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கலந்தாலோசித்து ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
06. இலங்கை மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு இடையில் இருதரப்பு ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல.18)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் சூடான் அரசாங்கத்தின் (வட சூடான்) வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் இருதரப்பு ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ மங்கல சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைஃ மருத்துவ சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றை மேம்படுத்துதல் (விடய இல. 22)
காலி மாவட்டத்தின் நோயாளர்களின் விசேட தேவைகளை கவனத்திற் கொண்டு பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக சத்திர சிகிச்சை மருத்துவ சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றைக் கொண்ட 10 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை 1,401 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நிர்மாணிப்பது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. சீதுவை விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 23)
சீதுவை விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கீழ்வரும் 02 வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• வைத்தியசாலையின் அலுவலகம் மற்றும் வைத்திய சிகிச்சை அமைந்துள்ள கட்டிடத்தை 35 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நவீனமயப்படுத்தல்.
• அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, வைத்திய மற்றும் சத்திர சிகிச்சை வாட்டு, இரண்டாவது கண் வாட்டு, நீரிழிவு சிகிச்சை நிலையம், ஆய்வு கூடம் மற்றும் கதிரியல் பிரிவு, வைத்தியர்களுக்கான அறை அத்துடன் மேல் மாடியில் தாதியர்கள் தங்குவதற்கான வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக 06 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை 1,431 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணித்தல்.
09. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 விகாரைகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 28)
குறைந்த வசதிகளுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் விகாரைகளை புனரமைப்பு செய்வதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சீனாவின் குவாந்தூன் (Gwandoon) பிரதேச பௌத்த சங்கத்தின் தலைவர் வண. மிங்க் செங் (Rev.Ming Sheng) மத குருவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 20.24 மில்லியன் ரூபாய்களை உபயோகித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 விகாரைகளில் காணப்படும் ஆரோக்கிய வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்த புத்தசாசன அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. வன்முறைக்கு ஆளாகின்ற பெண்களுக்கு பாதுகாப்பை செய்து கொடுப்பதற்கான அரவணைப்பு இல்லங்களைப் பேணி வருவதற்கான வழிகாட்டல்கள் (விடய இல. 31)
வன்முறைக்கு ஆளாகின்ற பெண்களுக்கு பாதுகாப்பை செய்து கொடுப்பதற்கான அரவணைப்பு இல்லங்களைப் பேணி வருவதற்கான வழிகாட்டல்கள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. குறித்த வழிகாட்டல்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அச்சகத்தை விருத்தி செய்தல் (விடய இல. 32)
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வருடமொன்றுக்கு 270 பரீட்சைகள் நடாத்தப்படுவதுடன், அவற்றுக்கு தேவையான 160 இலட்சம் வினாத்தாள்கள் குறித்த திணைக்களத்தின் அச்சகத்தில் அச்சிடப்படுகின்றன. குறித்த வினாத்தாள்களின் இரகசியத்தன்மையினை பாதுகாத்து எவ்வித பிழையும் இன்றி குறித்த வினாத்தாள்களை அச்சிடுவதற்காக குறித்த அச்சகத்தை நவீன மயப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் 530 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அச்சகத்துக்காக டிஜிடல் தொழில்நுட்பத்துடன் கூடிய அச்சு இயந்திரம் ஒன்று மற்றும் பிற உபகரணங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. புதுகுடியிருப்பு மற்றும் முஹுதுபடபத்து பிரதேச சபைகளின் வேட்பு மனுக்களை மீண்டும் கோருவதற்கு தேவையான சட்டத்தினை தயார்படுத்தல் (விடய இல. 33)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு மற்றும் முஹுதுபடபத்து பிரதேச சபைகளின் உள்ளூராட்சி தேர்தலின் வாக்கு பதிவினை 2011-03-17 ம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், பல்வேறு காரணங்களினால் குறித்த தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஏற்பட்டது. தேர்தல் பிற்போடப்பட்ட போதும், குறித்த தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களானது இன்னும் செல்லுபடியான நிலையிலேயே உள்ளது. குறித்த வேட்பு மனுக்களில் பெயர் குறிப்பிடப்பட்ட வேட்பு மனுதாரர்கள் மரணித்தல், 35 வயதுக்கு குறைந்த பிரிவில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பு மனுதாரர்கள் குறித்த வயதெல்லையை தாண்டி இருத்தல் போன்ற காரணங்களினால் குறித்த வேட்பு மனுக்களை நிராகரித்து விட்டு புதிய வேட்பு மனுக்களை கோர வேண்டிய தேவை எழுந்துள்ளது. மேலும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் வாக்கெடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த இரு பிரதேச சபைகளினதும் வாக்கெடுப்பினை விகிதாசார தேர்தல் முறையிலேயே நடாத்த வேண்டியுள்ளது. எனினும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லை நிர்ணயம் குறித்த பிரதேசங்களில் இறுதி தருவாயில் காணப்படுவதால் குறித்த தேர்தலை கலப்பு தேர்தல் முறையில் நடாத்துவது பொருத்தம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த இரு பிரதேச சபைகளுக்கும் புதிதாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கும், குறித்த தேர்தலை ஆசன மட்டத்திலான கலப்பு தேர்தல் முறையில் நடாத்துவதற்கும் தேவையான வகையில் குறித்த சட்டத்தில் மாற்றங்களை செய்து சட்டமாக்குவது தொடர்பில் சட்ட வரைஞர்களுக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. நலன்புரி நிலையங்களில் வசிக்கும், காணியற்ற உள்ளக இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள குடியமர்த்துதல் (விடய இல. 35)
யாழ்ப்பாணத்தில் காணப்படும் நலன்புரி நிலையங்களில் உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்த 971 குடும்பங்கள் இன்னும் வசித்து வருகின்றனர். அவற்றில் 682 குடும்பங்கள் தமது சொந்த இடங்களை இழந்தவர்களாக காணப்படுகின்றனர். அவற்றுள் 462 குடும்பங்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏனைய குடும்பங்களை குடியமர்த்த இடங்களை தேட வேண்டியுள்ளது. எஞ்சிய 220 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்கு தேவையான அரச காணிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்மையினால், ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் வீதம் தனியார் இடங்களில் கொள்வனவு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான தனியார் இடங்களை யாழ்ப்பாண மாவட்ட செயலாளரின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு 88 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. பத்தேகம, வனாதவில்லுவ, மீகஹதென்ன மற்றும் கடுபொத பொலிஸ் நிலையங்களை ஸ்தாபித்தல் (விடய இல. 37)
குறைந்த வசதிகளுடன் காணப்படும் பத்தேகம, வனாதவில்லுவ, மீகஹதென்ன மற்றும் கடுபொத பொலிஸ் நிலையங்களுக்காக 370.3 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பேராதெனிய பொலிஸ் நிலைய நிர்மாண வேலைத்திட்டம் (விடய இல. 38)
தற்கால தேவைகளின் அடிப்படையில் முழுமையான பொலிஸ் நிலையம் ஒன்றாக பேராதெனிய பொலிஸ் நிலையத்தை 141 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. இலங்கைக்கு கறுவா இறக்குமதி தடை செய்தல் மற்றும் பலசரக்கு மீள் ஏற்றுமதி முறைமையை திருத்தியமைத்தல் (விடய இல. 39)
பல்வேறு நாடுகளில் இருந்து கறுவா இறக்குமதி செய்யப்பட்டு மீள் ஏற்றுமதி செய்யப்படுவதனால் இலங்கை கறுவாவுக்கு (Ceylon Cinnamon) சர்வதேச சந்தையில் காணப்படும் மதிப்பு இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையை கவனத்திற் கொண்டு உலகத்தின் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கறுவாவினை தடை செய்வதற்கும், இலங்கை துறைமுகங்களின் ஊடாக பலசரக்கு மீள் ஏற்றுமதி செய்யும் முறையினை மீள திருத்தியமைப்பதன் முக்கியத்துவத்தை கவனத்திற் கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள ஏற்றுமதி செய்வதற்காக தற்காலிகமாக இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கப்படுகின்ற ஏற்றுமதி முறை' (TIEP) இல் திருத்தம் செய்வதற்காக குழுவொன்றினை நியமிப்பதற்கு ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் கௌரவ தயா கமகே அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 41)
கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் பிரதேசத்தில் புதிய குடிவரவு பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்யும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவகைள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் பிரதேசத்தை விஸ்தரித்தல் (விடய இல. 42)
கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் பிரதேசத்தை விஸ்தரிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவகைள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு மின் டீசல் இயந்திரங்கள் 10 இனை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 44)
இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு இந்திய கடன் உதவியின் கீழ், மின் டீசல் இயந்திரங்கள் 10 இனை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவகைள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. மத்திய கடுகதிப்பாதை கருத்திட்டம் - மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான பகுதியினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (விடய இல. 45)
மத்திய கடுகதிப்பாதை கருத்திட்டத்தின் இரண்டாம் பிரிவான மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான 39.29 கிலோ மீற்றர் தூரத்தை நிர்மாணிப்பதற்கான சிவில் வேலைகள் 04 பொதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குறித்த 04 பொதிகளுக்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. அரசாங்க பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 46)
ஸ்ரீ பாலி வளாகம், திருகோணமலை வளாகம் மற்றும் இலங்கை பிக்கு பல்கலைக்கழகம், வயம்ப மற்றும் றுஹுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை 2,670 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அபிவிருத்தி செய்வதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. இலங்கை தேசிய வைத்தியசாலையில் இருதய நோய்ப் பிரிவை புதுப்பித்தல் (விடய இல. 48)
இலங்கை தேசிய வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவு அமைந்துள்ள கட்டிட தொகுதி பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தமையினால், அதனை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கி இருந்தது. இந்நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வரும் இத்தருணத்தில் இருதய நோய்ப்பிரிவு விசேட வைத்தியர்களினால் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க இருதய நோய் பிரிவிற்கு மத்திய வளிச் சீராக்கித் தொகுதியொன்றைப் புதிதாகக் கொள்வனவு செய்து பொருத்துவதற்கும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய திருத்த வேலைகளை செய்வதற்கும் 186.32 மில்லியன் ரூபாய் திருத்த மதிப்பீட்டு செலவின் கீழ் இருதய நோய் பிரிவை நவீனமயப்படுத்துவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரல் (விடய இல. 49)
கோ எமொக்சிக்லேவ் மாத்திரைகள் டீP மி.கிராம் 625 அல்லது அமொக்சிலீன் மற்றும் கல்வியுலனேட்டு பொட்டாசியம் மாத்திரைகள் USP மி.கிராம் 625 இல் 19,000,000 இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. நோய் எதிர்ப்புத்தன்மை குறைவாகவுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தேவையான மருந்தினை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரல் (விடய இல. 50)
நோய் எதிர்ப்புத்தன்மை குறைவாகவுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஹியுமன் இமியுனோகுளோபியுலன் கிராம் 5-6 குப்பிகள் 30,000 இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. நோயாளர்களுக்கு மருந்து வகைகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி சோடிகள் 7,000,000 இனை கொள்வனவு செய்தல் (விடய இல. 51)
நோயாளர்களுக்கு மருந்து வகைகளை வழங்குவதற்கு ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி சோடிகள் 7,000,000 இனை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. இலங்கை தேசிய வைத்தியசாலையின் கால் - கை வலிப்பு நோயாளர் பிரிவிற்கு சத்திர சிகிச்சைக்கூடம் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் நிறுவுதல் (விடய இல. 52)
இலங்கை தேசிய வைத்தியசாலையின் கால் - கை வலிப்பு நோயாளர் பிரிவிற்கு சத்திர சிகிச்சைக்கூடம் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் விலைமனுதாரர்களுக்கு வழங்குவதற்கும், விலைமனு சமர்ப்பிக்கப்படாத கோவைகளுக்கு, கேள்வி மனு பாதுகாப்பை நீடிப்பு செய்யும் போது விலைகளை அதிகரிக்குமாறு கோரியுள்ள கோவைகளுக்கு புதிதாக விலைமனு கோருவதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27. கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ஏழு மாடி கட்டிடம் ஒன்றை அமைத்தல் (விடய இல. 54)
கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடத்துக்கு பதிலாக புதிய ஏழு மாடி கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுகை மேன்முறையீட்டு சபை மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் வழங்குவதற்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
28. இலங்கை மத்திய வங்கியின் 'அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2016 இன் முக்கிய பண்புகளும் 2017 இற்கான வாய்ப்புக்களும்' அறிக்கையினை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல் (விடய இல. 54)
இலங்கை மத்திய வங்கியின் 'அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2016 இன் முக்கிய பண்புகளும் 2017 இற்கான வாய்ப்புக்களும்' அறிக்கையினை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
29. பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் இரண்டினை மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நிறுவுதல் (விடய இல. 62)
பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் இரண்டினை மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் நிறுவுவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. எனினும் வட மாகாணத்தில் வவுனியாவை விட யாழ்ப்பாணத்திலேயே குறித்த அலுவலகம் ஒன்றின் தேவை அதிகமாக உணரப்பட்டுள்ளது. எனவே வவுனியா பிரதேசத்தில் நிறுவுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவுவது தொடர்பில் வெளிவிவாகார அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
30. நிர்மாணிப்பு தொடர்பான தேசிய கொள்கை (விடய இல. 63)
2014 இன் 33 ஆம் இலக்க நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 6 (அ) பிரிவுக்கு அமைய தேசிய ஆலோசனைச் சபையினால் தயார் செய்யப்பட்டுள்ள நிர்மாணிப்பு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் அதனை அமுல்படுத்துவதற்கான பொறிமுறையை நிறைவேற்றுவது தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.