• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அமைச்சரவை தீர்மானங்கள் 01.11.2016

01. அரச நிறுவனங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் பொருள் மற்றும் சேவை கொள்வனவு செய்வதற்காக சுயாதீன ஒருமுகப்படுத்தப்பட்ட பெறுகை நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 05)
அரச நிறுவனங்களில் பொதுவாக தேவைப்படுகின்ற பொருள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்காக சுயாதீன ஒருமுகப்படுத்தப்பட்ட பெறுகை நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதன் தேவை உணரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொள்முதல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய சுயாதீன ஒருமுகப்படுத்தப்பட்ட பெறுகை நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
02. அங்கவீனமுற்ற இராணுவீரர்களுக்காக ராகம ரணவிரு செவனயினுள் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 08)
 
அங்கவீனமுற்ற இராணுவீரர்களுக்காக ராகம ரணவிரு செவனயினுள் சகல வசதிகளையும் கொண்ட இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை 81.43 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
03. கப்பல் விபத்து காரணமாக கடலினுள் ஏற்படும் எண்ணெய் கசிவு தொடர்பில் சர்வதேச சட்டத்தின் கீழ் நட்டஈட்டை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 09)
 
சர்வதேச கப்பல் போக்குவரத்தின் கேந்திர நிலையமாக கருதப்படும் இலங்கையின் ஊடாக நாளொன்றுக்கு பல கப்பல்கள் பயணிக்கின்றன. அதன் போது சில சந்தர்ப்பங்களில் எண்ணெய் கசிவுகள் ஏற்படுவதற்கான அவதானம் காணப்படுகின்றது. இவ்விபத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் நட்டஈட்டை பெற்றுக் கொள்வதற்கு எண்ணெய் கசிவினால் ஏற்படும் சேத சிவில் பொறுப்புக்கள் மீதான சர்வதேச ஒப்புதலில் (International Convention on Civil Liability for Bunker Oil Pollution Damage) உறுப்பினராக இருக்க வேண்டும். அதடிப்படையில், எண்ணெய் கசிவினால் ஏற்படும் சேத சிவில் பொறுப்புக்கள் மீதான சர்வதேச ஒப்புதலை ஏற்றுக் கொள்வதற்கும், அதற்கு தேவையான விதிமுறைகளை தயாரிப்பது தொடர்பில் 2008ம் ஆண்டு 35ம் இலக்க கடலியல் குற்றங்களை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
04. இலங்கையில் கழிவு முகாமைத்துவத்தினை மேற்கொள்வதற்காக உற்பத்தியாளர்கள்ஃ வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் ஆகியோரின் பொறுப்புக்கள் (விடய இல. 10)
 
பிலாஸ்டிக் மற்றும் பொலிதீன் பாவனையினால் ஏற்படும் சூழல் மாசுபடுதலை தடுக்கும் நோக்கில் 'சூழல் மாசுபடுத்தும் நபர் மூலம் அதற்கு நட்ட ஈடு செலுத்துதல்' (Polluter Pay Principle) எனும் விடயத்தை செயற்படுத்த முறையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இச்செயன்முறையின் மூலம் கழிவுப்பொருட்கள் குறித்த இடத்தில் ஒன்று சேர்வதை உறுதி செய்வதன் மூலம் அக்கழிவுகளை சூழலுக்கு நெருக்கமான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றது. அதனடிப்படையில், இலங்கையில் கழிவு முகாமைத்துவத்தினை மேற்கொள்வதற்காக உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் ஆகியோரின் பொறுப்புக்களினை உறுதி செய்து, குறித்த செயன்முறையினை செயற்படுத்துவதற்கான சிபார்சுகளை முன்வைப்பதற்காக, தொடர்புடைய நிறுவனங்களின் உறுப்பினர்கள் அடங்கிய அதிகாரிகளுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும், அக்குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
 
05. மாத்தறை மாவட்ட தாய் மற்றும் சேய் பிரிவினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 11)
 
மாத்தறை பொது வைத்தியசாலையின் தாய் சேய் பிரிவை மாத்தறை கொடகமயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரியா - இலங்கை நட்புறவு வைத்தியசாலையில் தாபித்து அபிவிருத்தி செய்வதற்காக 8.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கொரியாவின் சர்வதேச ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவுறுத்தப்பட்டது.
 
06. சிறுவர் செயற்பாட்டு அளவீடு – 2015ஃ16 (விடய இல.12)
 
தொகைமதிப்பு, புள்ளி விபரத் திணைக்களத்தினால் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் நிதி உதவியுடன் சிறுவர் செயற்பாட்டு அளவீடு – 2015ஃ16 நடாத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் அதன் இறுதி அறிக்கையினை தயாரிப்பதற்கும், குறித்த பரிசீலனையின் அடிப்படையில், சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் மூலம் வழங்கப்படுகின்ற 4.35 மில்லியன் மேலதிக நிதியினை பெற்று அவ்வளவீட்டின் காண்புகள் சம்பந்தமாக அத்துறையில் இயைபுடைய சகல அரச நிறுவனங்கள் அடங்கலாக சகல தரப்பினருக்கும் ஏற்புடைய பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
07. திரிபோஷ உற்பத்திக்கு சோயா அவரை கொள்வனவு செய்தல் (விடய இல. 16)
 
சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன அவர்கள் மற்றும் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க ஆகியோர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவை பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டது.
• தேசிய உணவு மேம்பாட்டு சபையினால் 5,000 மெட்ரிக் தொன் அவரையினை நேரடியாக திரிபோஷ நிறுவனத்திற்கு விநியோகித்தல்
• எதிர்வரும் காலங்களில் திரிபோஷ வேலைத்திட்டத்திற்கு தேவையான சோயா அவரையினை அவரை பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளைக் கொண்ட பதிவுசெய்யப்பட்ட விவசாய அமைப்புகளிடம் இருந்து விலைமனுக்கோரல் மூலம் கொள்வனவு செய்தல்.
 
08. மாத்தறை கட்டம் IV நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 20)
 
மாத்தறை கட்டம் IV நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் 76.83 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 2,448.81 மில்லியன் கடன்தொகையினை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. 1975ம் ஆண்டின் 33ம் இலக்க இலங்கை விலை மதிப்பீட்டாளர் நிறுவக சட்டத்திற்கான உத்தேச திருத்தங்கள் (விடய இல. 23)
 
1975ம் ஆண்டின் 33ம் இலக்க இலங்கை விலை மதிப்பீட்டாளர் நிறுவக சட்டத்திற்கான வரைவு சட்டமூலங்களை தயாரிப்பதற்கு சட்டவரைஞரினை அறிவுறுத்துவது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10. முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கான திறன்கள் நிகழ்ச்சி தொடர்பான இலங்கை அரசிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான துணை ஒப்பந்தம் (விடய இல. 24)
 
முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கான திறன்கள் நிகழ்ச்சி செயல்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா அரசின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் வாணிப திணைக்களம் தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது. இதற்காக குறித்த திணைக்களம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான துணை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11. கோட்டை/ புறக்கோட்டை – பல்முனை போக்குவரத்து மையத்தை நிறுவுதல் (விடய இல. 30)
 
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சுகளின் பெயரில் பொதுமக்களின் நன்மைக்கருதி கோட்டை/புறக்கோட்டை – பல்முனை போக்குவரத்து மையத்தை நிறுவுவது தொடர்பான யோசனையை செயற்படுத்துவது தொடர்பில் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
12. தலங்கம பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக பத்தரமுல்லை, பாராளுமன்ற வீதிக்கருகில் அமைந்துள்ள காணித்துண்டொன்றை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 32)
 
தலங்கம பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக பத்தரமுல்லை, பாராளுமன்ற வீதிக்கருகில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணித்துண்டொன்றை சட்டம், ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
13. 2017ம் ஆண்டு சர்வதேச வெசாக் தின உற்சவத்துக்கு நிகராக சர்வதேச பௌத்த மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 36)
 
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாக்கிய குடியிருப்பு, சகல வசதிகளையும் கொண்ட பௌத்த நூலகம், பெளத்த தியான நிலையம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் புத்த பகவானின் கதாபாத்திரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கதைகளைச் சித்தரிக்கும் நிலையம், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் தர்ம போதனைகளை வழங்கும் பயிற்சி நிலையம், சைவ உணவகம், பார்வையிடுவதற்காக வருகை தரும் துறவிகள், பொது மக்கள் இளைப்பாறும் மண்டபம் போன்ற பாகங்களைக் கொண்ட சர்வதேச பௌத்த மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இலாப நோக்கமற்ற லைட் ஒப் ஏஷியா பவுன்டேசன் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்த புத்தசாசன அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
14. அறக்கொடை நம்பிக்கைப் பொறுப்பு நிதியமொன்றைத் தாபித்தல் - இலங்கை பௌத்த யாத்திரிகர் ஓய்வு மண்டபம் (SLBPR) (விடய இல. 37)
 
இந்தியாவிற்கு வருகை தருகின்ற யாத்திரிகர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கும் இலங்கை பெளத்த யாத்திரிகர் ஓய்வு மண்டபத்தை அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்களின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறித்த மண்டபத்தை உரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கும், அதன் மூலம் கிடைக்கின்ற வருமானங்களை புண்ணிய காரியங்களுக்காக பயன்படுத்துவதற்கும் உகந்த முறையில் அறக்கொடை நம்பிக்கைப் பொறுப்பு நிதியமொன்றைத் தாபிப்பது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
15. தண்டனைச் சட்டக் கோவைச் (திருத்தம்) சட்டமூலம் - (குற்றவியல் தவறொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக் குறைந்த வயதெல்லையை உயர்த்துதல்) (விடய இல. 49)
 
குற்றவியல் தவறொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக் குறைந்த வயதெல்லையை உயர்த்துவது போன்ற சில அடிப்படை அம்சங்கள் சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி தண்டனைச் சட்டக் கோவைச் திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக முன்வைப்பதற்கும் நீதியமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
16. புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டம் (விடய இல. 41)
 
புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை தொடர்பில் ஆலோசிக்கவென குறித்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று 2015ம் ஆண்டு அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்டது. அக்குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை செயற்படுத்துவதற்கும், அதற்கு தேவையான சட்ட வரைபை தயாரிப்பதற்கு ஏதுவான வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் நீதியமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
17. முறையான கழிவு பொருள் முகாமைத்துவ நிகழ்ச்சியின் கீழ் அரச நிறுவனங்களில் கழிவு பொருட்களை பிரித்தொதுக்கி அகற்றுதல் (விடய இல. 43)
 
முறையான கழிவு பொருள் முகாமைத்துவ நிகழ்ச்சியின் கீழ் அரச நிறுவனங்களில் கழிவு பொருட்களை பிரித்தொதுக்கி அகற்றுவதற்கு உகந்த செயன்முறையொன்றை செயற்படுத்துவதற்கும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
18. தீயினால் பாதிப்புக்கு உள்ளான கிளிநொச்சி பொது வர்த்தக சந்தை தொகுதியின் கடைத் தொகுதிக்காக நட்ட ஈட்டினை வழங்குதல் (விடய இல. 45 மற்றும் 58)
 
கிளிநொச்சி பொது வர்த்தக சந்தை தொகுதியில் ஏற்பட்ட தீ தொடர்பில் மேற் கொள்ளப்பட்ட அனர்த்த மதிப்பீடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில், குறித்த கடைத்தொகுதியில் பாதிப்புக்கு உள்ளான 122 கடைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட வியாபாரிகளுக்கு 74 மில்லியன் ரூபா நட்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கும், நவீன வசதிகளுடன் கூடிய தீயனைக்கும் பிரிவொன்றை 97 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்தாபிப்பதற்கும், தீயினால் பாதிப்புக்கு உள்ளான கடைத்தொகுதியினை மீள நிர்மாணிப்பதற்கு 150 மில்லியன் மதிப்பீட்டு செலவில் நிலையான பொது சந்தை தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
19. ஹபராதுவ நில செவன வீடமைப்பு திட்டத்தினை நவீனமயப்படுத்தல் (விடய இல. 46)
 
அரசாங்கத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சாதாரண விலையில் வீடொன்றினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 'நில செவன' வீடமைப்பு திட்டம் ஒன்று 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காலி மாவட்டத்தின் ஹபராதுவ பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்ட 576 வீடுகள் அடங்கிய குறித்த திட்டமானது 2011ம் ஆண்டு முதல் இன்று வரை முன்னெடுக்கப்படாத வண்ணம் உள்ளது. குறித்த பிரதேசத்தில் காணப்படும் கட்டிடங்கள் தற்போது பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் இல்லை. எனவே குறித்த பகுதியில் காணப்படும் வீட்டுத்தொகுதியினை நவீன வசதிகளுடன் கூடிய வகையிலும், அதன் பெறுமதி அதிகரிக்கும் வகையிலும் நவீனமயப்படுத்தி தங்குமிட வசதிகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கான இணைந்த வேலைத்திட்டமாக முன்னெடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தில் காணப்படும் வீடுகளில் சிலவற்றை சலுகை விலையில் அரச அதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும், மிகுதியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான விடுதி வசதிகளை வழங்குவதற்கும் ஏதுவான முறையில் மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இவ்வேலைத்திட்டம் தொடர்பான பிரதான பங்குதாரர்களுக்கிடையில் முழு மற்றும் இடை ஒப்பந்தம் ஒன்றில் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, இலங்கை முதலீட்டு சபை மற்றும் வேலைத்திட்ட நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடுவது தொடர்பில் அபாய உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்கள் மற்றும் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
20. முன்மொழியப்பட்ட கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் (நிதி நகர வேலைத்திட்டம்) மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்டமாக ஏற்றுக்கொள்ளல் (விடய இல. 47)
 
குறித்த வேலைத்திட்டத்தை 2008ம் ஆண்டின் 14ம் இலக்க மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்ட சட்டத்தின் 3(3) ம் பிரிவின் கீழ் மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்டமாக ஏற்றுக்கொள்வதற்கும், அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
21. மகாவலி நீர்ப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேல் எலஹெர கால்வாயினை நிர்மாணித்தல் (விடய இல. 48)
 
மகாவலி நீர்ப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேல் எலஹெர கால்வாயின் 6.2 கிலோ மீற்றர் நீளத்தினை 3,254 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
22. மகாவலி நீர்ப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வட மேல் மாகாணக் கால்வாய் நிர்மாண பணிகளை செயற்படுத்தல் (விடய இல. 49)
 
வட மேல் மாகாணக் கால்வாய் கருத்திட்டத்தின் கட்டம் 1 இன் கீழ் வேமெடில்ல இடக் கரைப் பிரதான கால்வாயை நேபடட கஹவத்த நீர்த்தேக்கம் வரையான 5.25 கிலோ மீற்றர் வரையான பகுதியை அபிவிருத்தி செய்வதற்கும், வேமெடில்ல வாவியில் புதிதாகக் கலிங்கல்லொன்றை நிர்மாணிப்பதற்கும், புதிய கலிங்கல்லிலிருந்து வேமெடில்ல இடக் கரைப் பிரதான கால்வாய் வரை புதிதாக கால்வாய் ஒன்றை 600 மீற்றர் நீளத்தில் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
23. இந்தியா கடன் உதவி திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட பயணிகள் அறைகளுடனான 06 டீசல் விசையாற்றல் தொகுதிகளை வழங்குதல் (விடய இல. 50)
 
இந்தியா கடன் உதவி திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட பயணிகள் அறைகளுடனான 06 டீசல் விசையாற்றல் தொகுதிகளை வழங்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் குறித்த தொகுதியினை கொள்முதல் செய்வதற்கு தேவையான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
24. அரச மருந்தக உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் மருத்துவ உற்பத்தி கொள்ளளவை வலுப்படுத்தல் (விடய இல. 51)
 
அரச மருந்தக உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் மருத்துவ உற்பத்தி கொள்ளளவை வலுப்படுத்துவதற்கு உரிய அடிப்படை வசதிகள் மற்றும் நவீன இயந்திரங்கள் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக வேண்டி 1,244 மில்லியன் ஜப்பானிய யென்களை வழங்க ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.