01. சர்வதேச நிலையான சுற்றுலா மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான அமைப்பின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளல் (விடய இல. 06)
சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கான அறிவினை முகாமைத்துவத்துக்கு மற்றும் வேலைத்திட்ட அபிவிருத்திக்கு வசதிகளை செய்து கொடுத்தல், வறுமையினை ஒழிப்பதன் மூலம் நிலையான சுற்றுலாத்துறை அபிவிருத்தியினை அடைந்துக் கொள்ளல் மற்றும் அரச – தனியார் இணைப்பின் மூலம் கலாச்சார மற்றும் இயற்கை பாதுகாப்பதற்காக பங்களிப்பு செய்தல் எனும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சுற்றுலா அபிவிருத்தி மற்றும் வறுமையினை ஒழிப்பு செய்வதற்கான அமைப்பின் (International Sustainable Tourism and Eliminating Poverty (ST-EP) Organization) உறுப்புரிமையை இலங்கை பெற்றுக் கொள்வது தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்கஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. பதிவு செய்யப்படாமல் பாவனையில் இருக்கும் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்தல் (விடய இல. 07)
போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களே இன்று அதிகமாக பாவனையில் உள்ளது. மக்கள் போக்குவரத்து சேவை குறைவாக காணப்படும் பிரதேசங்களில் அதிகமாக இம்மோட்டார் சைக்கிள்களே மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களால் வருடந்தோறும் அரசாங்கத்துக்கு அதிகமான வருமானம் இழக்கப்படுகின்றது. இதனால் சட்ட ரீதியாக ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பரிசீலித்ததன் பின்னர் சலுகையின் அடிப்படையில் பதிவினை மேற்கொள்ளவதற்கும், இச்சலுகையினை வழங்கும் போது சட்ட ரீதியாக மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றும் மோட்டார் வாகன சட்டத்திலுள்ள விதிகளுக்கு அமைவாக மோட்டார் சைக்கிள்களுக்காக இதனை நடைமுறைப்படுத்துவதற்கும்இ இச்சலுகையினை 04 மாத காலத்துக்கு மாத்திரம் வழங்குவதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டி சில்வாஅவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. முத்துராஜவளையில் அமைந்துள்ள 10 ஏக்கர் காணித் துண்டொன்றை, திண்மக் கழிவுப் பொருள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கருத்திட்டமொன்றிற்காக குத்தகைக்கு வழங்குதல் (விடய இல. 15)
முத்துராஜவளையில் அமைந்துள்ள 10 ஏக்கர் காணித் துண்டொன்றை, திண்மக் கழிவுப் பொருள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கருத்திட்டமொன்றிற்காக 30 வருட வரி அறவீட்டின் கீழ் தனியார் கம்பனியொன்றிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபைக்கு சொந்தமான குறைவாக பயன்தரும் பண்ணைகளை அரச தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் பயன்படுத்தி பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு பங்களிப்பை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 18)
தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை சுயமாக தங்கியுள்ள ஒரு நிறுவனமாகும். தற்சமயம் தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபைக்கு சொந்தமாக 31 பயிர்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் இலங்கை முழுதும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளன. தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையால் மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அமைந்துள்ள 04 பெரிய பாற்பண்ணைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள அதேவேளை அதற்காக இதுவரை பாரியளவு நிதி முதலீடும் செய்யப்பட்டுள்ளது. தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபைக்கு சொந்தமான குறைவாக பயன்தரும் பண்ணைகளை அரச தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் பயன்படுத்தி பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி 1972ம் ஆண்டின் 11ம் இலக்க அரச கமத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்; வழங்கப்பட்டுள்ளது.
05. அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் இடம்பெறும் கடற்கரை அரிப்பை தடுத்தல்(விடய இல. 21)
அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் மற்றும் நிந்தவூ+ர் பிரதேசங்களில் இடம்பெறும் கடற்கரை அரிப்பை தடுப்பதற்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் நீண்ட கால பிரதேசங்களில் பாதுகாப்பு செயன்முறையொன்றை செயற்படுத்துவதற்கு கால தாமதம் ஏற்படுவதனால், அதுவரைக்குமான குறுகிய தீர்வாக கடற்கரை பகுதியில் மண் மூட்டைகளினால் பாதுகாப்பு சுவர்களை அமைத்தல், கருங்கல் அணைகளை அமைத்தல் போன்ற தீர்வுத் தொகுதியொன்றை கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்த துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்குஅமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. சிறைச்சாலை சன நெருக்கடிக்கான சட்டம் மற்றும் நீதித்துறை காரணங்களை கண்டறிவதற்கான செயலணி (விடய இல. 23)
சிறைச்சாலை சன நெருக்கடிக்கான சட்டம் மற்றும் நீதித்துறை காரணங்களை கண்டறிவதற்காக நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இணைத்தலைமையுடன், குறித்த திணைக்களங்கள் உட்பட மற்றைய நிர்வனங்களின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் செயலணியொன்றினை அமைப்பதற்கும், அதன் மூலம் சிறைச்சாலை சன நெருக்கடியினை குறைப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சட்டம் மற்றும் நீதித்துறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக யோசனைகளை பெற்றுக் கொள்வதற்கும் நீதி அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. உமா ஓயா பல் நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர்க் கசிவினால் பாதிப்புக்குள்ளான வெஹெரகலதென்ன மகுல் எல்ல மற்றும் குருந்து கொல்ல ஆகிய பிரதேசங்களுக்குறிய குடி மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான நீர் வழங்கல் கருத்திட்டங்களை செயற்படுத்துதல்(விடய இல. 26)
உமா ஓயா பல் நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர்க் கசிவினால் பாதிப்புக்குள்ளான வெஹெரகலதென்ன, மகுல் எல்ல மற்றும் குருந்து கொல்ல ஆகிய பிரதேசங்களுக்குறிய குடி மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கான நீர் வழங்கல் கருத்திட்டங்கள் 03 இனை செயற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியூள்ளதுடன், குறித்த 03 நீர் வழங்கல் திட்டங்களுக்குமுறிய நீர்த் தோற்றுவாய்களுக்கு அண்மையில் வசிக்கும் குடிகளும், பாதிப்புக்குள்ளான குடும்பங்களும் உள்ளடங்களான மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 1417 இலிருந்து 2400 வரை அதிகரித்துள்ளது. எனவே குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு 188 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நீர் வழங்கள் திட்டங்களுக்குறிய பெறுமதியினை பெறுமதி சேர் வரி இன்றி 317.23 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. காலி மாவட்டத்தின் கொக்கலை பிரதேசம் மற்றும் கம்பஹா மாவட்டத்தின் ரன்பொக்குணுகம, கிரிந்திவெலை மற்றும் பியகமவினை சூழவூள்ள பிரதேசங்களில் 03 முதலீட்டு சபை வலயங்களாக குறுகிய கால முன்னிலை நீர் வழங்கல் மேம்பாட்டுக் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 27)
காலி மாவட்டத்தின் கொக்கலை பிரதேசம் மற்றும் கம்பஹா மாவட்டத்தின் ரன்பொக்குணுகம, கிரிந்திவெலை மற்றும் பியகமவினை சூழவூள்ள பிரதேசங்களில் 03 முதலீட்டு சபை வலயங்களாக குறுகிய கால முன்னிலை நீர் வழங்கல் மேம்பாட்டுக் கருத்திட்டத்தினை 1இ531.9 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகையில் நடைமுறைப்படுத்துவதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. யாழ்ப்பாணம் சிறைச்சாலைத் தொகுதியின் நிர்மாணிப்பு – கட்டம் 11(விடய இல. 30)
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சிவில் நிர்வாகம் நிலைநாட்டப்பட்டதைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டில் நான்கு தனியார் வீடுகளில் யாழ். சிறைச்சாலைத் தொகுதி நிறுவப்பட்டது. எனினும் தேசிய எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யக்கூடிய விதத்தில் அவசியமான அடிப்படை வசதிகள் கூட அவற்றில் காணப்படவில்லை. மேற்குறிப்பிடப்பட்ட சூழ்நிலையின் கீழ் சிறைச்சாலைகள் திணைக்களம் வசமுள்ள காணியொன்றில் 1000 கைதிகளைத் தடுத்துவைக்கக்கூடிய யாழ்ப்பாணம் பண்ணை சிறைச்சாலை தொகுதியை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அதன் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 130 கைதிகளுக்கு போதிய தங்குமிட வசதிகள் காணப்படுகின்றது. அதன் இரண்டாம் கட்டத்தினை 623.32 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. பொலிஸை அழைப்பதற்காக உரிய பெயரொன்றினை பயன்படுத்துதல்(விடய இல. 38)
இலங்கைப் பொலிஸானது பல்வேறு யூகங்களிலும் ஒவ்வொரு காலப் பகுதிகளிலும் பல்வேறுபட்ட பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டது. 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் பொலிஸ் திணைக்கள கட்டளையின் கீழ் பொலிஸானது “இலங்கைப் பொலிஸ் படையணி” என அழைக்கப்படுவதுடன், 1945 ஆம் ஆண்டின் பின்னர் “இலங்கைப் பொலிஸ் திணைக்களம்” என அழைக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு முதல் பொலிஸ் திணைக்களமானது “இலங்கைப் பொலிஸ் சேவை” என அழைக்கப்படுகின்றது. நீண்ட வரலாற்றினைக் கொண்ட இலங்கைப் பொலிஸ் திணைக்களமானது தமது 150 ஆம் ஆண்டு நிறைவினை கொண்டாடுகின்ற நிலையில், இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தை அழைப்பதற்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயராக “இலங்கைப் பொலிஸ்” என இனி வரும் காலங்களில் அழைப்பது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. ஜப்பான் - இலங்கை ஒன்றிணைந்த ஒத்துழைப்புச் செயலகத்தை கொழும்பு மற்றும் டோக்கியோவில் தாபித்தல் (விடய இல. 34)
2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரதமரின் ஜப்பானுக்கான விஜயத்தின் போது இலங்கையின் தேசிய அபிவிருத்தி முயற்சியின் முக்கிய துறையாக இனங்காணப்பட்டுள்ள உயர்ந்த மட்டத்திலான விவசாயத் துறை, கைத்தொழில்களுக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், உயர் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி, கல்வி மற்றும் மனித வளங்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற பிரிவூகள் ஒன்றிணைந்த ஒத்துழைப்பின் கீழ் பிரகடனப்படுத்தப்படுவதுடன் இரு நாடுகளினதும் பிரதமர் அலுவலகங்களுக்கிடையிலான உயர் மட்டக் குழுக் கூட்டங்களின் போது அந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அந்நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திற் கொடுக்கும் பொருட்டு ஜப்பான் - இலங்கை ஒன்றிணைந்த ஒத்துழைப்புச் செயலகத்தை கொழும்பு மற்றும் டோக்கியோவில் அமைப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இலங்கை – பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தல் (விடய இல. 35)
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இலங்கை உட்பட 1789 நாடுகள் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ம் திகதி ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் கைச்சாத்திட்டது. கைத்தொழில் புரட்சிக்கு முன்னரான அளவுக்கு கீழே 2ºC ஆல் உலக சராசரி வெப்பநிலை அதிகரிப்பை வைத்திருத்தல் மற்றும் கைத்தொழில் புரட்சிக்கு முன்னரான அளவுக்கு மேலாக தொழில்துறை அளவு மேலே வெப்பநிலை அதிகரிப்பை 1.5ºC ஆல் குறைக்க முயற்சிகள் தொடர இணக்கப்பாடு ஏற்பட்டது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை மற்றும் கணிசமாக அபாயங்கள் குறைக்க எதிர்பார்ப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதனடிப்படையில் இலங்கையினால் பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பிலும் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. அபிவிருத்தி கொள்கைக்கடன் (தனியார்த் துறை அபிவிருத்தி, ஆளுகை மேம்பாடு மற்றும் அரசிறை இணைப்பாக்கம்) (விடய இல. 36)
இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு அதனை செயற்படுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் நிதிவசதியளிக்க இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வேண்டி ஜப்பான் யென் 10இ000 மில்லியன் ரூபாய்களை (அண்ணளவாக 14,453.20 மில்லியன் ரூபா) அபிவிருத்தி கொள்கைக்கடனை நியமங்களின் பிரகாரம் பெற்றுக் கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றப் பத்திரங்களில் கைச்சாத்திடுவதற்கும், கடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்வதற்கும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. “2017 வறுமையிலிருந்து மீட்கும் ஆண்டு” என பிரகடனப்படுத்துதல் (விடய இல. 38)
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கமைவாக வறுமையிலிருந்து மக்களை மீட்டுக்கொள்ளல் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து, சகலரையூம் ஒன்றிணைக்கும் வகையில் எதிர்வரும் 2017ம் ஆண்டினை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்துவதற்கும், ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையிலும், குறித்த அமைச்சர்கள் மற்றும் பிர அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கூடிய குழுவொன்றின் மூலம் இவ்வேலைத்திட்டத்தை மேற்பார்வையிடவும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.