லெபனானில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான பொது மன்னிப்புக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனைக்கமைய விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளுக்கமைய லெபனான் அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதுவர் திருமதி ஆர்.கே. விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் தூதுவர் லெபனான் வெளிவிவகாரங்களுக்கான உள்நாட்டு அமைச்சர் மற்றும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள உயரதிகாரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதனைத் தொடர்ந்து மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் 400 இற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் லெபனானில் தங்கியுள்ளனர். குறித்த காலப்பகுதியில் எந்தவொரு இலங்கையரும் கைது செய்யப்படவோ தண்டனைப் பெறவோ இல்லை.
இப்பொது மன்னிப்பு காலத்திற்கு முன்னர் 2004, 2010 மற்றும் 2010 ஆகிய காலப்பகுதியில் பொது மன்னிப்புக்காலம் லெபனான் அரசினால் வழங்கப்பட்டது. பல்வேறு விசேட காரணங்களுக்காக பொது மன்னிப்புக்காலம் நீட்டிக்கப்பட்டது. இம்முறை இலங்கைக்கும் லெபனானுக்கும் இடையிலான நல்லுறவு காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.