இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் படைவீரர்களின் நலன்கள் மற்றும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன் நின்றுவிடாமல் அவர்களது நலன்களுக்காக செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் நேற்று (27) முற்பகல் மன்னார், முள்ளிக்குளம் இலங்கை கடற்படையின் வயம்ப தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது படையினருக்கான கௌரவத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்கள், உலகின் முக்கிய நாடுகளில் இலங்கை பாதுகாப்பு படையினரின் இழந்து போயிருந்த பயிற்சி வாய்ப்புக்களை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடிந்திருப்பதாக குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் அவை அதிகரிக்கப்படுமென்றும் இலங்கை கடற்படையினருக்கு உயர் தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்க கடற்படை விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த போர்க் காலத்தில் இலங்கை கடற்படை தாய்நாட்டுக்காக ஆற்றிய பணியை தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்காக இப்போது ஆற்றும் பணிகள் பாராட்டுக்குறியவை என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.
கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவின் தலைமையில் இலங்கை கடற்படை வரலாற்றில் முதற்தடவையாக மரைன் படைப்பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் உலகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மரைன் படைப்பிரிவுகளில் இளைய படைப்பிரிவாக இது இணைகிறது.
இந்த மரைன் படைப்பிரிவு சிறப்பு திறனைக் கொண்டுள்ளது. கடற்கரை ஊடான எந்தவொரு தாக்குதலுக்கும் முகங்கொடுப்பதற்கும், கடலிலிருந்து தரைக்கு சென்று எதிரி இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் சிறந்த பயிற்சி பெற்றுள்ளதுடன், காட்டுப்போர் மற்றும் நதிநிலைகளை சார்ந்த நடவடிக்கைகளிலும் திறமை பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான பங்களிப்பை வழங்குதல், இலங்கையிலும், பிராந்தியத்திலும் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின்போது உதவுதல் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் இந்த படைப் பிரிவு விசேட பயிற்சி பெற்றுள்ளனர்.
165 அலுவலர்கள் மற்றும் சிப்பாய்களை கொண்ட முதலாவது மரைன் படைப்பிரிவு பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்வு நேற்று பிரதம தளபதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
முள்ளிக்குளம் கடற்கரையில் இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவினர் எதிரி இலக்குகள் மீது மேற்கொள்ளும் பயிற்சிகளைக் காட்டும் கண்காட்சியையும் ஜனாதிபதி பார்வையிட்டதுடன், படைப்பிரிவின் இணையத்தளத்தையும் திறந்து வைத்தார். கடற்படை தளபதி நினைவுப் பரிசொன்றை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கினார்.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு படை தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க, இராணுவ தளபதி லெப்டின்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, வயம்ப, கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பி.ஆர்.பீ.திஸாநாயக்க, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.