அரச திரைப்படப்பிரிவை மேம்படுத்த அன்று தொடக்கம் அளப்பறிய பங்களிப்பை வழங்கி வந்த பிரபல இயக்குநர்களை கௌரவிப்பதுடன் மிக முக்கியமான முயற்சிகளை அரசாங்க தகவல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
அரச திரைப்படப்பிரிவை மேம்படுத்த மேன்மையான பங்களிப்பை வழங்கிய சிங்கள சினிமாத்துறையின் முன்னோடிகளான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், சுகதபால செனரத் யாப்பா, திஸ்ஸ லியனசூரிய மற்றும் கீர்த்தி ஸ்ரீ பெரேரா ஆகிய ஆரம்பகால விருது பெற்றுதந்த திரைப்படங்களை தயாரித்த இயக்குனர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இன்று நாம் பிரதானமான மூன்று விடயங்களை செயற்படுத்தவுள்ளோம். 1947ம் ஆண்டு முதல் எமக்கு விருது பெற்றுதந்த திரைப்படங்களை டிஜிட்டல் மயப்படுத்தி பாதுகாக்க தேசிய சுவடிகள் திணைக்களத்திற்கு கையளிக்கவுள்ளோம். அரசாங்க திரைப்பட பிரிவு தயாரித்த 100 திரைப்படங்களை இணையளத்தில் வெளியிடவுள்ளோம். இவை மக்களுக்கு சொந்தமானவை. மக்களுக்கு தகவல் வழங்கக்கூடிய காலத்தில் அவர்கள் மத்தியில் இத்திரைப்படங்களை அனுப்புவது எமது பொறுப்பு. இது அரசாங்க தகவல் திணைக்களம் மேற்கொண்ட பாரிய செயற்பாடாகும். என்றார்.
இலங்கை திரைப்படத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபல கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ்பீரீஸ் , சுகத்தபால செனரத் யாப்பா , திஸ்ஸலியன சூரிய , கீர்த்தி ஸ்ரீபெரேரா ஆகியோர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய, சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் பிரதி ஊடக அமைச்சர் லசந்த அலகியவன்ன ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான திரைத்துறையினர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.