தேசிய புகைப்படக் கலைச் சங்கம் 18வது முறையாக ஏற்பாடு செய்துள்ள சர்வதேச புகைப்படக் கண்காட்சி இன்று (15) கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஜே.டி.ஏ பெரேரா அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி வரை நடைபெறவுள்ள இப்புகைப்படக் கண்காட்சியின் ஆரம்ப விழா பிரபல பாடகி விசாரத நந்தா மாலினி தலைமையில் பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய, கலாகீர்த்தி எட்வின் ஆரியதாச ஆகியோரின் பங்களிப்பில் நடைபெறவுள்ளது.
1950ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தேசிய புகைப்படக்கலை சங்கம் தொண்டு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பினூடாக இலங்கையில் புகைப்படக்கல்வியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவதே நோக்கமாகும். கலை மத்திய நிலையமாகவும் தொழிற்கல்வியாகவும் புகைப்படத்துறையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.1061ம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் புகைப்படக் கற்கை நெறியை தொடர்ச்சியாக இந்நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது.
அத்துடன் செயன்முறை செயலமர்வுகள், கருத்தரங்குகள், புகைப்படக் கண்காட்சிகள் என்பனவும் இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்படுகிறது.
அரச அனுமதி பெற்ற தொண்டு நிறுவனமானது சர்வதேச புகைப்படக் கலை சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக செயற்படுகிறது. இச்சங்கத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் புகைப்படக் கண்காட்சியானது இம்முறை சர்வதேச மட்ட கண்காட்சியாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.