அடுத்த வாரமளவில் கண் வில்லைகளின் விலை 10,000 ரூபாவில் குறைவடையும் என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு ஒழுங்குபடுத்தல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இலங்கையில் கண் வில்லை வர்த்தகம் ஒன்று நடந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் இருந்த 6,000 ரூபாவுக்கு இறக்குமதி செய்யும் கண் வில்லைகள் இங்கு 25,000 தொடக்கம் 30,000 ரூபா வரை விற்பனை செய்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சில இறக்குமதி நிறுவனங்கள் அவர்களுடைய நிறுவனத்தை முன்மொழியும் வைத்தியர்களுக்கு பணம் வழங்கும் மறைமுக வர்த்தகம் ஒன்றும் நடைபெற்று வருவதாகவும் இதனை கருத்திற்ககொண்டு எதிர்வரும் காலத்தில் கண் வில்லைகளில் விலையை 20,000 ரூபாவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பொது மருத்துவமனைகளில் கண் வில்லை மாற்று சத்திரசிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக கண் வில்லைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் ஆலோசனைக்கமைய ஒரு இலட்சம் கண் வில்லைகள் இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் பொது மருத்துவமனைகளில் கண்வில்லைகள் தட்டுப்பாடு நிலவுமாயின் அவற்றை கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதியை மருத்துவமனை பணிப்பாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான விசேட சுற்றுநிருபம் அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.