இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii இற்கு புதிதாக இணைக்கப்பட்ட 198 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (16) கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்றது.
எவ்வித அரசியல் தலையீடுமின்றி பரீட்சை மற்றும் வினைத்திறனைக் கருத்திற்கொண்டு இவ்வதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இதன் போது கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கல்வி நிர்வாகச் சேவையில் நிலவிய அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த வருடம் நடத்தப்பட்ட கல்வி நிர்வாக சேவை தரம் மூன்றுக்கான பரீட்சையில் தெரிவு
செய்யப்பட்ட இவ்வதிகாரிகளுக்கு இன்று (17) தொடக்கம் எதிர்வரும் 12 மாதங்களுக்கு மஹரகம சுயமுயற்சி முகாமைத்துவ கல்வியியற் கல்லூரியில் ஆரம்பமாகவுள்ள 12 மாத பயிற்சியில் இணைந்துகொள்வர்.
பயிற்சியின் இறுதியில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மாகாண கல்வி காரியாலயங்கள், வலய கல்விக் காரியாலயங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவர்.
இவ்வதிகாரிகள் உதவி கல்விப் பணிப்பாளர், விடய பணிப்பாளர், அதிபர் மற்றும் பிரதி அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன், கல்விச் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, கல்வி இராஜாங்கச் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தாரன மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.