"சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் தைத்திருநாள் கலாசார,சமய
பல்வகைமையை மதித்து, மனிதசமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது " என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
புதுவிளைச்சலைக் கொண்டாடும் நோக்கில் சோழஅரசர் காலத்தில் ஆரம்பமான தைப்பொங்கல் திருவிழா,தென்னிந்தியாவின் தமிழ் மக்களுக்குரிய ஓர் திருவிழாவாகக் காணப்பட்டாலும் தற்போது அது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் தம்மால் இயன்ற முறையில் கொண்டாடும் சிறப்புமிக்க சமய,கலாசாரத் திருவிழாவாக மாறியுள்ளது.
சூரிய வணக்கத்திற்கு முன்னுரிமை வழங்கும் இத்திருநாள் தின சூரியஉதயத்துடன் தமிழ் மக்களுக்குப் புதுவருடம் பிறக்கிறது.
விவசாயவாழ்க்கை முறைமைக்கு ஆசீர்வாதமாக அமைந்து செழிப்பான விளைச்சலை வழங்க உதவியாய் நின்ற சூரியன்,மழை,கால்நடைகள் உள்ளிட்ட முழு இயற்கைக்கும் நன்றி செலுத்துவது இந்தசமயத் திருவிழாவின் நோக்கமாகும்.
சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் தைத்திருநாள் கலாசார,சமய பல்வகைமையை மதித்து, மனிதசமூகத்தின் மத்தியிலும்,சுற்றுச் சூழலுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தை எமக்கு நினைவூட்டுகிறது.
இன,மத,கலாசார பேதங்களைத் தாண்டிய அமைதியான,சுதந்திரம் மிக்கநாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்தி, தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு சமாதானம், மகிழ்ச்சி மிகுந்த சுபீட்சமான எதிர்காலம் அமையவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.