சர்வதேச வெசக் தினம் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஐநா சபையில் முன்வைத்த கோரிக்கைக்கமைய சர்வதேச வெசக் தினத்தை அடுத்த வருடம் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
25 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்படவுள்ள சர்வதேச வெசக் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கான விசேட செயலகம் கொழும்பு இல 115, விஜயராம மாவத்தை என்ற முகவரியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் வழி நடத்துவதற்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையிலான செயலணியொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
25 நாடுகளின் அரச தலைவர்கள் இச்சர்வதேச வெசக் தினத்தில் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் மே மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ள பௌத்த மாநாட்டிலும் மறுதினமான 14ஆம் திகதி கண்டி தலதா மாளிகையில் நடைபெறும் விசேட நிகழ்விலும் அவ்வரசத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசக் தினம் கொண்டாட்டம் இதுவரை தாய்லாந்தில் 11 தடவைகளும் வியட்னாமில் 1 தடவையும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச வெசக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று புத்த சாசன அமைச்சின் செயலாளர் சந்திர பேம கமகே தெரிவித்தார்.