தேசிய இலஞ்ச ஊழல் ஒழிப்பு மாநாடு எதிர்வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் சரத் ஜயமான்ன அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்..
அரச துறையில் இலஞ்ச, முறைகேடுகளை ஒழிக்கும் நோக்கில் 'சிறந்த ஆட்சி' என்ற தொனிப்பொருளில் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அதிவேக அபிவிருத்தி அமைச்சு, ஜனாதிபதி செயலகம், ஆகியன லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுடன் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய நடத்தப்படும் இம்மாநாட்டின் தேர்தல் பிரசார செலவுகளினூடாக ஏற்படும் முறைக்கேடுகள் என்ற தலைப்பில் பிரதான அமர்வு இடம்பெறவுள்ளது. அது தவிர அரச துறைகளில் ஏற்படும் முறைகேடுகள் தனியார் பார்வையில், அரச அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு முறைகேடுகள் உதவுகிறதா? மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு விதிமுறைகள், பொறுப்பு மற்றும பிணைப்புகள் என்பவற்றுக்கிடையிலான போராட்டம் போன்ற தலைப்புகளிலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
மாநாட்டின் நிறைவு நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் அரசியல் தலைவர்கள், அரச துறை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 800 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.