மட்டக்களப்பு மாவட்டத்தில் சோள பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விவசாயிகளுக்கு சோள விதைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நிதியொதுக்கீட்டில், இந்த சோள விதைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, மற்றும் ஓட்டமாவடி, கிரான், ஏறாவூர் பற்று, மண்முனை வடக்கு, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 261 விவசாயிகளுக்கு, விவசாயிக்கு 5 கிலோகிராம் வீதம் சோள விதைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு, மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் டேர்பா மண்டபத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறீதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் ஏ.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் இ.கோகுலதாஸன், முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான எஸ்.கணேசமூர்த்தி உட்பட அதிகாரிகள் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
LDA_dmu_batti