கல்வியமைச்சின் முறைசாரா கல்விப் பிரிவு மற்றும் தென் மாகாண கல்வித் திணைக்களத்தின் முறைசாரா கல்விப்பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'சர்வதேச எழுத்தறிவு தின' தேசிய நிகழ்வு நேற்று (08) காலி நகரசபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
செழிப்பான அபிவிருத்திக்கு எழுத்தறிவு என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கல்வியமைச்சின் முறைசாரா கல்விப்பிரிவின் பணிப்பாளர் எச்.பீ.எம் லஷ்மன் இலங்கையில் எழுத்தறிவு 95.7 வீதமாக காணப்படுவதாகவும் 98.5 வீதமான பிள்ளைகள் பாடசாலை கல்வியை பெற்றுவருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும் 1.5 வீதமான பிள்ளைகள் பாடசாலை செல்லும் வயதில் பொருளாதார, சமூக பிரச்சினைகள் காரணமாக பாடசாலை செல்ல முடியாதுள்ளமை கவலைக்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.
1947ஆம் ஆண்டு சர்வதேச எழுத்தறிவு தினம் ஐநா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.